[go: nahoru, domu]

கட்டபொம்மன்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். பாண்டிய நாட்டில் கோவில்கள் இடிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசின் படைகள் வந்து, அவர்கள் 3 நாடுகளையும் கைப்பற்றினர். பின்பு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்ட பொம்மு முன்னோர்களின் வீரத்தைப் போற்றி பாஞ்சாலங்குறிச்சியைப் பரிசாக வழங்கினார்.

கெட்டிபொம்முலு (வீரபாண்டிய கட்டபொம்மன்)
ஆட்சிகி.பி 1790- கி.பி 1799
முடிசூட்டு விழாகி.பி 1790
முன்னிருந்தவர்ஜெகவீர கட்டபொம்மன்
துணைவர்சக்கம்மாள்
அரச குலம்நாயக்க மன்னர்
தந்தைஜெகவீர கட்டபொம்மன்
தாய்ஆறுமுகத்தம்மாள்

கட்டபொம்மன் பெயர் காரணம்

அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராகப் பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளைத் தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று.[1] ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின், ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன் ஆவார்.[1]

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்.[1] இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.[1]

வாழ்க்கை

 
மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை

சனவரி 3, 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது[சான்று தேவை] பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்

கர்நாடக பிரதேசத்தின் ஆட்சியாளர்களான ஆற்காடு நவாப்புகள் பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை கும்பினியாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி நெல்லை சீமையில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியாமல் இருந்தார். இதனடிப்படையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குப் பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையைத் தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டிய கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.

மரணம்

 
வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்
 
உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்

செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை பிப்ரவரி 02, 1801இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை மார்ச் 30, 1801இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து, மே 24, 1801இல் அதனைக் கைப்பற்றியது. அங்கிருந்து தப்பித்து, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல், பிரான்மலை என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுச் சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்

 
வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சல் தலை

ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கியச் சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. இந்தக் காப்பகத்தைப் பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன செய்தியை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும், பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்து விட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமல் போய்விட்டது என 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்.[2]

மணிமண்டபம்

கட்டபொம்மன், மற்றும் ஊமைத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.[3]

பாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்

இவற்றையும் காணவும்

நூல்கள்

  • வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு” - தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியீடு

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 தமிழ் நேசன்-இணையம் மேஜர் ஜான் பேனர்மென்-வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு - பார்த்து பரணிடப்பட்ட நாள் 24-06-2009
  2. "கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 4, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. வீர வரலாற்று அடையாள சின்னங்களுக்கு ஆபத்து: வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் காக்கப்படுமா?

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டபொம்மன்&oldid=3928478" இலிருந்து மீள்விக்கப்பட்டது