எம்-கோட்பாடு
எம்-கோட்பாடு (M-theory) என்பது இயற்பியலில் சரக் கோட்பாட்டின் தொடர்ச்சியாகக் கொள்ளப்படக்கூடிய பிரபஞ்சம் பற்றிய அடையாளம் காணப்பட்ட பதினொரு பரிமாணங்கள் பற்றி விளக்கும் கோட்பாடாகும். இவற்றில் 7 உயர் பரிமாணங்கள் ஆகவும் 4 பொதுப் பரிமணங்களாகவும் அடையாளங் காணப்பட்டுள்ளன. இக்கோட்பாட்டை ஆதரிப்பவர்கள், 11 பரிமாணக் கோட்பாடு ஐந்து 10 பரிமாணக் கோட்பாடுகளையும் ஒன்றிணைப்பதுடன், அவற்றுக்கு மாற்றீடாக அமையும் என்றும் நம்புகிறார்கள். இக்கோட்பாட்டின் முழுமையான விளக்கம் தெரியாவிட்டாலும், இந்தத் தாழ்சிதற இயங்கியல்கள் (low-entropy dynamics) 2 மற்றும் 5 பரிமாண "மெம்பிரேன்"களுடன் (membrane) இடைவினை ஆற்றும் மீவீர்ப்புத்திறன் என்று அறியப்படுகிறது.
அசோக்கே சென், கிறிசு கல், பால் டவுன்சென்ட், மைக்கேல் டஃப், யோன் இசுக்வார்சு போன்ற சரக் கோட்பாட்டாளர்களின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, உயர் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த எட்வார்ட் விட்டன் என்பவர் இக்கோட்பாடு குறித்து யோசனைகளை முன்வைத்தார். 1995 ஆம் ஆண்டில் தென் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இதை முன்வைத்த விட்டன், எம்-கோட்பாட்டைப் பயன்படுத்தி பல முன்னரே கவனிக்கப்பட்ட இருமைகளை விளக்கினார். இது சரக் கோட்பாடு தொடர்பான பல ஆய்வுகளுக்கு வித்திட்டது.