இந்தியத் தாவரவியல் அளவாய்வு
இந்தியத் தாவரவியல் அளவாய்வு (Botanical Survey of India) என்பது 1890 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்தியாவிலுள்ள தாவரச் செல்வத்தைக் கண்டறிந்து உரிய தாவரவியல் ஆய்வுகளை மேற்கொள்வது இந்நிறுவனத்தின் பணிகளாகும்.
வரலாறு
[தொகு]சிப்பூர், பூனா, சகாரன்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களை மையமாக்கி, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஏற்கனவே அங்கெலாம் தாவரவியல் பூங்காக்களை ஏற்படுத்தியிருந்தது. பிராந்திய அரசுகள் தாவரவியல் அறிவை வளர்ப்பதையும் மற்றும் இவ்வறிவியலின் பல்வேறு நோக்கங்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்வதையும் இலக்காகக் கொண்டே இத்தாவரவியற் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. உதாரணமாக, 1750 ஆம் ஆண்டு முதல் வரலாற்றைக் கொண்டிருந்த சகாரன்பூர் தாவரவியல் பூங்காவை மருத்துவத் தாவரங்கள் வளர்க்கும் காரணத்திற்காக 1817 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தனதாக்கிக் கொண்டது [1]. பிரித்தானியாவின் பெரும்பாலான தாவரவியல் பூங்காக்கள் வர்த்தக முக்கியத்துவத்தை இலக்காகக் கொண்டு செயல்பட்டன. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இப்பூங்காக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
இந்தியாவில் தாவரவியல் ஆய்வுகள் முறையாக 1890 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 இல் தொடங்கியது [2]. 1871 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா இராயல்தாவரவியல் பூங்காவில் கண்காணிப்பளாராகப் பணியாற்றி வந்த சர் சியார்ச்சு கிங்கின் மேற்பார்வையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவரே இந்தியத்தாவரவியல் அளவாய்வு நிறுவனத்தின் முதலாவது பதவிசார் இயக்குனராக அறியப்படுகிறார். கொல்கத்தா தாவரவியல் பூங்கா இவ்வாய்வு நிறுவனத்தின் தலைமையிடமானது. வங்காளம், அசாம், வடகிழக்கு இந்தியா, பர்மா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய மண்டல பூங்காக்களுக்குத் தேவையான பொறுப்புகளை இத்தலைமையகம் வழங்கியது.